செய்திகள்

கிராமத்துப் பெண்ணின் ஆங்கிலத்தைக் கண்டு வியந்த பிரியங்கா சோப்ரா.. வைரலாகும் வீடியோ!

கிராமத்துப் பெண்ணின் ஆங்கிலத்தைக் கண்டு வியந்த பிரியங்கா சோப்ரா.. வைரலாகும் வீடியோ!

உயர்கல்வி படிக்கவில்லை என்றாலும், தன்னம்பிக்கையாலும் விடாமுயற்சியாலும் இன்று பலருக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த யசோதா லோதி. பிளஸ் 2 வரை மட்டுமே படித்த இவர், ஆங்கிலம் கற்றுக்கொண்டு இன்று ஆயிரக்கணக்கானோருக்கு அந்த மொழியைக் கற்றுக்கொடுத்து வருகிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம், கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள லோதன் கா புர்வா கிராமத்தைச் சேர்ந்தவர் யசோதா லோதி. ஆரம்பத்தில் அவருக்கு ஆங்கிலத்தில் பேசத் தெரியாது. ஆனால், ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவரிடம் இருந்தது. இதற்காக யூடியூப் வீடியோக்களைப் பார்த்து, அதில் பேசப்படும் ஆங்கில வார்த்தைகளையும் வாக்கியங்களையும் திரும்பத் திரும்பச் சொல்லிப் பயிற்சி செய்தார். இவ்வாறு தனது சொந்த முயற்சியால் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசக் கற்றுக்கொண்டார்.

யூடியூப் மூலம் ஆங்கிலப் பாடம்!

தான் கற்றுக்கொண்ட ஆங்கிலத்தை மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், 2019ஆம் ஆண்டு ‘English with Village Madam’ என்ற யூடியூப் சேனலைத் தொடங்கினார். புத்தகங்களில் உள்ள கடினமான ஆங்கிலத்தைவிட, அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் எளிய ஆங்கில வார்த்தைகள் மற்றும் உரையாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தார்.

இன்ஸ்டாகிராமில் ‘English with Dehati Madam’ என்ற பெயரிலும் அறியப்படும் யசோதா, கிராமப்புற மக்களும் எளிதாக ஆங்கிலம் கற்றுக்கொள்ள உதவும் வகையில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

பிரியங்கா சோப்ராவால் வைரலான வீடியோ!

சமீபத்தில் வயலில் வேலை செய்துகொண்டே யசோதா பதிவு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்றது. அந்த வீடியோவை நடிகை பிரியங்கா சோப்ரா ஜோனஸ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்ததைத் தொடர்ந்து, யசோதாவுக்குப் பலரது கவனமும் கிடைத்தது.

அதன்பிறகு அவரது இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது. இதன் மூலம் மாதம் சுமார் ரூ.35,000 வரை வருமானம் கிடைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 படிப்புடன் தனது பயணத்தைத் தொடங்கிய யசோதா, இன்று தனது முயற்சியால் பலருக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுத்து வருகிறார். கற்றுக்கொள்வதற்கான ஆர்வமும் விடாமுயற்சியும் இருந்தால், எந்தச் சூழலிலும் முன்னேற முடியும் என்பதற்கு இவரது பயணம் ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *