செய்திகள்

மதமாற்றத்தில் ஈடுபடும் அமைப்புகளுக்கு வெளிநாட்டு நிதி கிடையாது! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மதமாற்றத்தில் ஈடுபடும் அமைப்புகளுக்கு வெளிநாட்டு நிதி கிடையாது! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்புகளுக்கு வெளிநாட்டு நிதி பெற அனுமதி வழங்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

கொடைக்கானலில் செயல்பட்டு வரும் ‘கன்சீயன் பப்ளிக் அறக்கட்டளை’, வெளிநாட்டு நிதியுதவி பெறுவதற்காக வெளிநாட்டு நிதியுதவி ஒழுங்குமுறைச் சட்டத்தின் (FCRA) கீழ் பதிவு செய்ய விண்ணப்பித்திருந்தது. ஆனால், அந்த விண்ணப்பத்தை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 2025ஆம் ஆண்டு நிராகரித்தது. இதை எதிர்த்து அறக்கட்டளை சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் எம்.டி. சுமதி அடங்கிய அமர்வு, வெளிநாட்டு நிதியைப் பெறுவது அமைப்புகளின் அடிப்படை உரிமை அல்ல; அது சட்ட விதிகளுக்கு உட்பட்ட சலுகை எனக் குறிப்பிட்டது. மேலும், விண்ணப்பிக்கும் அமைப்புகள் தங்களின் உண்மையான செயல்பாடுகள் மற்றும் மதரீதியான தன்மையை மறைக்காமல் வெளிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தது.

மதமாற்ற நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்படுவது நாட்டின் சமூக நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற தன்மையைப் பாதிக்கக்கூடும் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடும் அமைப்புகளுக்கு FCRA பதிவு வழங்கக் கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதேநேரத்தில், குறிப்பிட்ட அறக்கட்டளைக்கு மதமாற்ற நோக்கம் இருப்பதாகத் தாங்கள் குற்றம்சாட்டவில்லை என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. அமைப்பு தனது மதரீதியான தன்மையை முறையாக வெளிப்படுத்தாததால், அதன் விண்ணப்ப நிராகரிப்பை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *