செய்திகள்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.. என்ன வழக்கு?

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.. என்ன வழக்கு?

தமிழகத்தில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை (அக்டோபர் 6) நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்தலுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்தியபாமாவும் வெற்றி பெற்றனர். பின்னர் இருவரும் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். இதனால் இந்த இரு தொகுதிகளும் காலியாகின. இதையடுத்து தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்தது.

இந்த இடைத்தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். எம்எல்ஏக்கள் தங்களது அரசியல் காரணங்களுக்காக பதவியை ராஜிநாமா செய்ததால், அந்த காலியிடங்களை நிரப்புவதற்காக மீண்டும் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், பொதுமக்களின் வரிப்பணத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படுவதால் ஏற்படும் தேர்தல் செலவை சம்பந்தப்பட்ட வேட்பாளர்களிடம் வசூலிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் உரிய நடைமுறையை உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கு முடியும் வரை மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் வலியுறுத்தியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்ததுடன், மனுவையும் தள்ளுபடி செய்தது. குறிப்பிட்ட ஒரு விவகாரத்தில் சட்டம் இயற்றுமாறு சட்டப்பேரவைக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

இதையடுத்து, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து வழக்கறிஞர் சுதன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடாக, வழக்கு விசாரிக்கப்பட்டு இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை வாக்கு எண்ணிக்கையையும், தேர்தல் முடிவுகளை அறிவிப்பதையும் தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாக்குப்பதிவுக்கு ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தில் இந்த மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டிருப்பது அரசியல் மற்றும் சட்டரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த மனு அவசரமாக விசாரிக்கப்படுமா? இடைத்தேர்தலுக்கு ஏதேனும் இடைக்கால தடை விதிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *