செய்திகள்

பயிர் காப்பீட்டில் முறைகேடு? 20% இழப்பீடு கட்டாயம் வேண்டும்.. அதிகாரிகளிடம் விவசாயிகள் ஆவேசம்!

பயிர் காப்பீட்டில் முறைகேடு? 20% இழப்பீடு கட்டாயம் வேண்டும்.. அதிகாரிகளிடம் விவசாயிகள் ஆவேசம்!

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பயிர் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் அதிகாரிகளிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வேட்டங்குடியை சேர்ந்த விவசாயி சீனிவாசன் பேசுகையில், மாவட்டத்தில் 35 கிராமங்களுக்கு இதுவரை பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கப்படாமல் ‘கிளைம் பெண்டிங்’ நிலையில் இருப்பது ஏன் என கேள்வி எழுப்பினார். இதற்கு விளைச்சல் தரவுகள் போர்ட்டலில் முறையாக பதிவேற்றம் செய்யப்படாதது மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனால் ஆவேசமடைந்த விவசாயிகள், அதிகாரிகளின் தரப்பில் ஏற்பட்ட தவறுகளால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது ஏன் என கேள்வி எழுப்பினர்.

மேலும், பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக விவசாய சங்க பிரதிநிதி ஆறுபாதி கல்யாணம் குற்றம்சாட்டினார். மத்திய, மாநில அரசுகள் காப்பீட்டு நிறுவனங்களுக்கு பிரீமியம் தொகையாக பெருமளவு நிதியை வழங்கும் நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைப்பதில்லை என அவர் தெரிவித்தார்.

பயிர் காப்பீட்டு முறையை முழுமையாக மறுசீரமைத்து, அரசுகள் வழங்கும் பிரீமியம் தொகையை காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்குவதற்குப் பதிலாக, விவசாயிகளுக்கு நேரடியாக நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், பயிர் காப்பீட்டுப் பிரீமியம் செலுத்திய அனைத்து விவசாயிகளுக்கும், பயிர் இழப்பு ஏற்பட்டாலும் ஏற்படாவிட்டாலும் குறைந்தபட்சம் 20% அடிப்படை இழப்பீடு உத்தரவாதமாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதில் 10% மத்திய அரசும், 10% மாநில அரசும் வழங்க வேண்டும் என்றும், 20%-க்கு மேல் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தினர்.

முந்தைய சம்பா பருவத்தில் பல இடங்களில் உண்மையான நிலப்பரப்பை விட அதிகமாக இரட்டைப் பதிவுகள் மூலம் பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டினர். கணினி மயமாக்கப்பட்ட தற்போதைய சூழலில் இதுபோன்ற பதிவுகளை விரைவாக கண்டறிந்து சரிசெய்ய முடியும் என்றும், ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதால் உண்மையான விவசாயிகளுக்கான நிவாரணம் தாமதமாகிறது என்றும் தெரிவித்தனர்.

இதுதவிர, கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாகியும் கடைமடை பகுதிகளுக்கு போதிய அளவில் தண்ணீர் சென்றடையவில்லை என்றும் விவசாயிகள் தெரிவித்தனர். பல இடங்களில் வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாததால் நீர் வரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்படும் மோட்டார்கள்கூட இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினர்.

சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் வட்டாட்சியர் அலுவலகங்களில் பட்டா பெயர் மாற்றத்திற்கான மனுக்கள் மாதக்கணக்கில் நிலுவையில் வைக்கப்படுவதாகவும், இதற்காக விவசாயிகள் பலமுறை அலைய வேண்டிய நிலை இருப்பதாகவும் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

எனவே, விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மாவட்ட நிர்வாகமும், வேளாண்மைத் துறையும் உரிய காலத்தில் வெளிப்படையான பதில் அளிக்க வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள பயிர் காப்பீட்டுத் தொகை மற்றும் பாசன நீரை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கூட்டாக வலியுறுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *