செய்திகள்

உதயநிதியின் பேட்டிக்கு நீதிமன்றம் தடை? வெளியான முக்கிய உத்தரவு!

உதயநிதியின் பேட்டிக்கு நீதிமன்றம் தடை? வெளியான முக்கிய உத்தரவு!

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீதான புகார் விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட கருத்துகள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டி மற்றும் அது தொடர்பான வீடியோக்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட பேட்டி மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை மீறி செய்திகள் அல்லது தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, பெண் மாவட்ட ஆட்சியர் அளித்த புகார் தொடர்பாக உள்விசாரணைக் குழு விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், தவெக எம்எல்ஏ விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவறான கருத்துகளை வெளியிட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இந்த வழக்கில் பெண் அதிகாரியின் அடையாளம் மற்றும் தனிப்பட்ட விவரங்கள் வெளியிடப்படக் கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்த நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்களை நீக்கவும் உத்தரவிட்டுள்ளது. இதனால் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.