செய்திகள்

பெற்றோரின் சொத்தை பெற்றுக்கொண்டு அவர்களைப் புறக்கணித்தால் 3 ஆண்டுகள் சிறை – கேரள அரசு புதிய சட்டம்!

பெற்றோரின் சொத்தை பெற்றுக்கொண்டு அவர்களைப் புறக்கணித்தால் 3 ஆண்டுகள் சிறை – கேரள அரசு புதிய சட்டம்!

கேரளாவில் பெற்றோரின் சொத்துகளைப் பெற்றுக்கொண்ட பிறகு அவர்களைப் புறக்கணிக்கும் அல்லது துன்புறுத்தும் பிள்ளைகளுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்யும் நோக்கில் இந்தச் சட்டத்தை கேரள மாநில சட்டப்பேரவையில் அரசு கடந்த அக்டோபர் மாதம் நிறைவேற்றியுள்ளது. இதுகுறித்து கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன் தெரிவித்துள்ளார்.

கொல்லம் மாவட்டம் பத்தனாபுரத்தில் உள்ள காந்தி பவனில் முதிய ஆண்களுக்காக ரூ.20 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள நவீன தங்கும் இல்லத்தைத் திறந்து வைத்துப் பேசிய அவர், இந்தச் சட்டத்தின் முக்கிய அம்சங்களை விளக்கினார்.

பெற்றோரின் சொத்துகள் அனைத்தையும் பெற்றுக்கொண்ட பிறகு அவர்களைப் பராமரிக்காமல் கைவிடும் பிள்ளைகளுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். ஆளுநரின் ஒப்புதல் கிடைத்த பிறகு இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரும் என்றும் கூறினார்.

மேலும், வயதான காலத்தில் பெற்றோர்கள் தனிமையில் விடப்படக் கூடாது என்றும், அவர்களின் நலனையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதே அரசின் முக்கிய நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மூத்த குடிமக்களுக்கென தனித் துறையை உருவாக்கியுள்ள கேரள அரசு, முதியவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

இதன் மூலம் பெற்றோரின் சொத்துகளைப் பெற்றுக்கொண்டு அவர்களைக் கவனிக்காமல் கைவிடும் பிள்ளைகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.