செய்திகள்

காமராஜர் துறைமுகத்தில் ரூ.4,288 கோடியில் 2-வது சரக்கு பெட்டக முனையம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

காமராஜர் துறைமுகத்தில் ரூ.4,288 கோடியில் 2-வது சரக்கு பெட்டக முனையம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

தமிழகத்தின் காமராஜர் துறைமுகத்தில் இரண்டாவது சரக்கு பெட்டக முனையம் அமைக்க ரூ.4,288.26 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பொது மற்றும் தனியார் பங்களிப்பு (PPP) முறையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த புதிய முனையம் 900 மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 20 லட்சம் TEU அளவிலான சரக்குப் பெட்டகங்களைக் கையாள முடியும். இந்தத் திட்டம் இரண்டு கட்டங்களாகச் செயல்படுத்தப்படும்.

முதற்கட்டமாக ரூ.2,429.32 கோடி செலவில் 11 லட்சம் TEU சரக்குகளைக் கையாளும் வசதி ஏற்படுத்தப்படும். இரண்டாம் கட்டமாக ரூ.1,858.94 கோடி செலவில் மேலும் 9 லட்சம் TEU கையாளும் வசதி உருவாக்கப்படும்.

மேலும், 400 மீட்டர் நீளம் கொண்ட பெரிய சரக்குக் கப்பல்களையும் கையாளும் வகையில் இந்த முனையம் வடிவமைக்கப்பட உள்ளது. இதற்காகத் துறைமுகத்தின் சார்பில் ரூ.450 கோடி மதிப்பில் ஆழப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்தத் திட்டம் நிறைவேறுவதன் மூலம் சென்னை மற்றும் எண்ணூர் தொழில் மண்டலங்களின் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் அதிகரிப்பதுடன், தமிழகத்தின் கடல்சார் போக்குவரத்து மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.