செய்திகள்

நூலக புத்தகக் கொள்முதலில் AI ஊழல்? திமுக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் – அமைச்சர் ராஜ்மோகன்

நூலக புத்தகக் கொள்முதலில் AI ஊழல்? திமுக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் – அமைச்சர் ராஜ்மோகன்

தமிழகத்தில் நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் குற்றம்சாட்டியுள்ளார். அகல்விளக்கு பதிப்பகத்திற்கு புத்தகங்கள் கொள்முதல் செய்வதற்கான ஆணையை வழங்கியது திமுக அரசுதான் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவிலேயே முதல்முறையாக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். போலியான பெயர்களைப் பயன்படுத்தி, AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் புத்தகங்கள் எழுதப்பட்டு, அவற்றை நூலகங்களுக்குக் கொள்முதல் செய்ததன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த விவகாரத்தில் திமுக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், நூலகப் புத்தகக் கொள்முதல் தொடர்பான ஊழலுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தை சாதாரணமாகக் கடந்து செல்ல முடியாது என்றும், நூலகப் புத்தகக் கொள்முதலில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்காகச் சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டு, புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்ட விதம், பதிப்பகங்களுக்கு வழங்கப்பட்ட ஆணைகள், புத்தகங்களின் உண்மைத்தன்மை உள்ளிட்ட அம்சங்கள் ஆய்வு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

நூலகங்களுக்கான புத்தகக் கொள்முதலில் AI தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதா என்ற கேள்வி தற்போது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.