மத்திய – மாநில உறவுகள் தொடர்பான உயர்மட்டக் குழு கலைப்பு! தவெக அரசு அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் முந்தைய திமுக ஆட்சியில் மாநில உரிமைகளைப் பாதுகாக்கவும், மத்திய – மாநில உறவுகளை மறுசீரமைக்கவும் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவை தற்போதைய தவெக அரசு கலைத்துள்ளது. இதற்கான அரசாணை நவம்பர் 6ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான அதிகாரப் பகிர்வு, நிதி உரிமைகள், ஆளுநர்களின் அதிகாரங்கள் மற்றும் மாநில சுயாட்சி தொடர்பான விவகாரங்களை ஆய்வு செய்வதற்காக இந்தக் குழு அமைக்கப்பட்டது. கடந்த 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.அசோக் வர்தன் ஷெட்டி மற்றும் மாநிலத் திட்டக்குழுவின் முன்னாள் துணைத் தலைவர் மு.நாகநாதன் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றிருந்தனர்.
இந்தக் குழு தனது முதல் ஆய்வறிக்கையை 2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. அதில் ஆளுநர்களின் அதிகாரங்கள், தொகுதி மறுவரையறை, கல்வி, சுகாதாரம், ஜிஎஸ்டி மற்றும் மாநில உரிமைகள் தொடர்பான பல்வேறு பரிந்துரைகள் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில், இந்தக் குழுவின் பணிகளுக்கும் தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத்தின் பணிகளுக்கும் இடையே ஒற்றுமை இருப்பதாகக் கூறி, உயர்மட்டக் குழுவை கலைக்க அரசு முடிவு செய்துள்ளது.
மேலும், குழுவிடம் உள்ள ஆவணங்கள் மற்றும் அறிக்கைகளை மாநில சட்ட ஆணையத்திடம் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
