6 மாதம்தான் Time.. புன்னகையுடன் மரணத்தை எதிர்கொண்ட பெண் – ராஜஸ்ரீ ஜெய்சன் பற்றிய சிறப்பு தொகுப்பு!
புற்றுநோயால் கடைசி வரை போராடி உயிரிழந்த பட்டிமன்ற பேச்சாளர் ராஜஸ்ரீ ஜெய்சன் பற்றி விரிவாக விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு
பட்டிமன்ற மேடைகளில் தன் கம்பீரக் குரலால் முழங்கியவர், உடல் மொத்தமாக சோர்ந்து வீழ்ந்தபோதும் அசாத்திய தன்னம்பிக்கையால் கொடிய புற்றுநோயை நேருக்கு நேர் எதிர்த்து நின்றவர் , சமூக வலைதளங்களில் சோர்ந்த இதயங்களுக்கு என்றும் அணையா நம்பிக்கை பெருவிளக்காய் வழிகாட்டியவர் ராஜஸ்ரீ ஜெய்சன். அவரது மறைவு செய்தி பலரையும் ஆழ்ந்த துயரத்திலும் கண்ணீரிலும் ஆழ்த்தியுள்ளது.

சென்னையை பூர்வீகமாக கொண்ட இவர், திருமணத்திற்குப் பிறகு இங்கிலாந்தின் பெல்ஃபாஸ்ட் நகரில் கணவர் ஜெய்சன் மற்றும் 2 குழந்தைகளோடு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். கடந்த 2022 ஜனவரியில் இவருக்கு 4-ம் நிலை நுரையீரல் புற்றுநோய் கண்டறியப்பட்டபோது, “இன்னும் 6 மாதங்கள் மட்டுமே உயிர் வாழ முடியும்; பிழைக்க வாய்ப்பில்லை” என்று மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை கூறினர். ஆனால், அந்த மரணக் கெடுவை கேட்டும் அவர் முடங்கிவிடவில்லை.
எட்டு கடுமையான கீமோதெரபிகள், ஆயுர்வேதம், சித்தா, ஷிமோகா சிகிச்சை என இயற்கை மருத்துவ முறைகள், தொடர்ந்து டார்கெட்டட் தெரபி மருந்துகள் என அனைத்தையும் சளைக்காமல் முயன்றார். மருத்துவர்கள் விதித்த 6 மாத கெடுவை தவிடுபொடியாக்கி, சுமார் ஐந்து ஆண்டுகள் அந்த கொடிய நோயோடு போராடி நின்றார்.

ஆனால், புற்றுநோய் தன் கோரப் பிடியை நாளுக்கு நாள் தீவிரப்படுத்தியது. நுரையீரல் மட்டுமின்றி, இதயத்தின் பிரதான ரத்தக் குழாயான அயோர்ட்டாவில் மூன்று இடங்கள், அடிவயிறு மற்றும் நிணநீர் நாளங்கள், விலா எலும்புக் கூடு, தண்டுவடத்தின் முக்கியப் பகுதிகள் என உடல் முழுவதும் பரவி, இறுதியாக மூளையையும் தாக்கியது. ஒரு கட்டத்தில் அடுத்தகட்ட சிகிச்சையை தொடர முடியாமல் மருத்துவர்களே திகைத்துப் போகும் அளவுக்கு உடல்நிலை சிக்கலானது.
புற்றுநோய் மற்றும் சிகிச்சைகளின் தீவிர பக்கவிளைவால் தலையிலிருந்த முடிகள் அனைத்தும் கொட்டின. இடுப்புக்குக் கீழே கால்கள் இரண்டும் உணர்விழந்து செயல் இழந்தன. எப்போதும் கலகலப்பாகப் பேசிக்கொண்டே இருக்கும் ஒரு துடிப்பான பெண்ணான ராஜஸ்ரீக்கு, 2026 ஜூலையில் பேச்சும் குரலும் பறிபோனது. திசு பாதிப்பால் குரலை இழந்து, வாயைத் திறந்தால் வெறும் காற்று மட்டுமே வந்த சூழலில் அவர் கண்ணீருடன் பேசிய காணொளி இணையத்தை உலுக்கியது.

“நான் பேசினால் வீட்டில் யாருக்கும் புரிய மாட்டேங்குது. குழந்தைகளை கூப்பிடக் கூட விசில் அடித்துதான் கூப்பிட வேண்டியிருக்கு. வீடியோ காலில் பேசினால் லிப்சிங்க் கூட யாருக்கும் புரியல. குழந்தைகள் ‘எப்போம்மா பழையபடி பேசுவீங்க?’ என்று கேட்கும்போது மனசு தாங்க முடியல. மருத்துவமனைக்கு ஒரு போன் கால் கூட என்னால் செய்ய முடியவில்லை. டிவி ஷோ, பட்டிமன்றம் என்று இடைவிடாமல் பேசிட்டே இருந்த எனக்கு, ஒரே ஒரு முறை பேச்சு மட்டும் வந்தால் போதும்னு வேண்டிக்கிறேன்” என்று அவர் உடைந்த குரலில் வேதனையைப் பகிர்ந்திருந்தார்.
உடல் முழுவதும் தாங்க முடியாத வலி, சக்கர நாற்காலி வாழ்க்கை, பறிபோன பேச்சு என எதுவுமே அவரது மன உறுதியை குலைக்கவில்லை. தனக்கு விருப்பமான நகைகள் மற்றும் ஆபரணங்களை அணிந்து, தன்னைத் தானே அழகுபடுத்திக் கொண்டு புன்னகையோடு கேமரா முன் வந்தார். “இவருக்கு என்ன கஷ்டம்? வெளிநாட்டில் ஜாலியாகச் சுற்றுகிறார்” என்று சிலர் தவறாக விமர்சித்தபோதுகூட, பிறருக்கு நேர்மறை எண்ணங்களும் உற்சாகமும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தன் வலிகளை மறைப்பதாக கூறினார்.

அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்தபோதும் கூட, தனது தன்னம்பிக்கையை ஒருபோதும் அவர் கைவிடவில்லை. தனது ஒவ்வொரு சிகிச்சையின் போதும் வீடியோ வெளியிட்டு பிறருக்கு ஊக்கமளித்து வந்தார். அதுமட்டுமின்றி, இன்ஸ்டாகிராமில் உற்சாகமாக ரீல்ஸ் செய்து, பிறரையும் சிரிக்க வைத்து மகிழ்ந்தார். வலிகள் நிறைந்த மருத்துவமனைப் படுக்கையிலும், “இருக்கிற வரைக்கும் சிரிச்சுட்டே வாழணும்” என்ற பாசிட்டிவ் எண்ணத்தை உலகிற்கு உணர்த்தினார்.
அவரது கடைசி மூச்சு வரை, கணவர் ஜெய்சன் மிகப்பெரிய தூணாக நின்றார். நடக்கவும் பேசவும் முடியாத நிலையிலும் மனைவியை அன்போடு கவனித்துக்கொண்டு, அவருடன் தோளோடு தோள் நின்று புன்னகையோடு வீடியோக்களில் தோன்றினார். குழந்தைகளும் அந்த தாயின் கரங்களை அன்போடு பற்றி கொண்டு இருந்தனர்.
தீவிர சிகிச்சையிலும், இறுதிக்கட்ட பாலியேட்டிவ் கேரிலும் இருந்த ராஜஸ்ரீ ஜெய்சன், நவம்பர் 10ஆம் தேதி சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார்.
மரணத்தின் வாசலில் நின்றும்கூட அச்சப்படாமல், “இருக்கும் வரை வாழ்வைக் கொண்டாடித் தீர்ப்போம்” என்று வாழ்ந்து காட்டிய ராஜஸ்ரீ ஜெய்சன், இந்த உலகிற்கு விட்டுச் சென்றிருப்பது ஒரு தீராத தன்னம்பிக்கைப் பாடம். அவர் மறைந்தாலும், அந்தப் புன்னகையும் நெஞ்சுறுதியும் என்றும் அழியாமல் நிலைத்திருக்கும்
– விஜிலா விஜயன்
