தனியார் பள்ளி அனுமதி முறைகேடு.. முன்னாள் எம்.எல்.ஏ முத்துக்குமாருக்கு ஒரு நாள் போலீஸ் காவல்!
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் புதுப்பித்தல் அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி பணம் பெற்றதாக எழுந்த புகாரில், முன்னாள் எம்.எல்.ஏ முத்துக்குமாரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சேலம் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.40.20 லட்சம் முறைகேடாகப் பெற்றதாக முத்துக்குமார் உள்ளிட்டோர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக கடந்த ஜூலை 3-ம் தேதி சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்ககிரி கொங்கு மெட்ரிக் பள்ளி, வித்யாசாகர் மெட்ரிக் பள்ளி மற்றும் பெலூர் பெரியார் நர்சரி பள்ளி நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் முத்துக்குமாரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நீதிமன்றத்தில் அனுமதி கோரினர். இதற்காக புழல் சிறையில் இருந்து சேலம் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ஒரு நாள் மட்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது. இதையடுத்து சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பள்ளி நிர்வாகிகளிடம் பெறப்பட்ட பணம் எவ்வாறு விநியோகிக்கப்பட்டது, யாருக்கு சென்றது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
