பக்தர்கள் வெள்ளத்தில் கோலாகலமான ஸ்ரீனிவாச பெருமாள் தேரோட்டம்!
திருச்சி கேகே நகர் இந்திரா நகரில் அமைந்துள்ள அலமேலு மங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவில், தினந்தோறும் ஸ்ரீனிவாச பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீனிவாச பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவி தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினார்.
சிறப்பு பூஜைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து தேரோட்டம் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் திரண்டு, “கோவிந்தா… கோவிந்தா…” என பக்தி கோஷம் எழுப்பியபடி தேரின் வடத்தைப் பிடித்து உற்சாகமாக இழுத்தனர்.
பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என பலரும் தேரோட்டத்தில் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். திருத்தேர் நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்து மீண்டும் கோயில் நிலையை அடைந்தது.
தேரோட்டத்தை முன்னிட்டு கோயில் மற்றும் தேரோடும் வீதிகள் சிறப்பு அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பக்தர்களுக்காக குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
மேலும், பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனுடன், திருச்சி ஸ்ரீகாளிதாஸ் குழுவினரின் நாதஸ்வர இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நாதஸ்வர இசையும், பக்தர்களின் “கோவிந்தா… கோவிந்தா…” என்ற கோஷமும் முழங்க நடைபெற்ற தேரோட்டம், கேகே நகர் பகுதியையே விழாக்கோலம் பூண்டது போல் காட்சியளித்தது.
