இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட தடை கோரிய வழக்கு: ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!
பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடும் முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளின் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தற்போது மீண்டும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இதனை எதிர்த்து வழக்கறிஞர் கே. சுதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அரசியல் காரணங்களுக்காக எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்து மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும், இதுபோன்ற சூழ்நிலையில் தேர்தல் செலவுகளை சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையின்போது, தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது உள்ளிட்ட சட்டத்திருத்தங்களை நீதிமன்றம் உத்தரவிட்டு மேற்கொள்ள முடியுமா என்றும், சட்டம் இயற்றுவது நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், வழக்கறிஞர் சுதன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
மேலும், எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதற்கு 5 ஆண்டுகள் தடை விதிப்பது போன்ற சட்டங்களை இயற்றுவது நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றம் தொடர்பான விவகாரம் என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
