செய்திகள்

சர்வதேச எம்மி விருது விழாவில் விருது வழங்கும் வாய்ப்பைப் பெற்ற விஜய் சேதுபதி!

சர்வதேச எம்மி விருது விழாவில் விருது வழங்கும் வாய்ப்பைப் பெற்ற விஜய் சேதுபதி!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, சர்வதேச அளவில் இந்திய சினிமாவுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் 54-வது சர்வதேச எம்மி விருது விழாவில் விருது வழங்கும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களில் ஒருவராகப் பங்கேற்றுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள நியூயார்க் ஹில்டன் மிட் டவுன் ஹோட்டலில் நவம்பர் 23-ம் தேதி இந்த விருது விழா நடைபெற்றது. இந்திய நேரப்படி நவம்பர் 24-ம் தேதி அதிகாலையில் நடைபெற்ற இந்த விழாவை நடிகர் மைக்கேல் யூரி தொகுத்து வழங்கினார்.

இந்த விழாவில் மொத்தம் 22 நாடுகளைச் சேர்ந்த 64 படைப்புகள், 16 பிரிவுகளின் கீழ் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. விஜய் சேதுபதியுடன் கான்ஸ்டன்ஸ் சிம்மர், செலியா இம்ரி, ஜே ஃபரோ, கஸ் கென்வொர்த்தி உள்ளிட்ட சர்வதேச பிரபலங்களும் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்த விழாவிற்காக விஜய் சேதுபதி கருப்பு நிற கோட் அணிந்து, அதில் தங்க நிற எம்பிராய்டரி வேலைப்பாடுகளுடன் கூடிய பிரத்யேக ஆடையில் சிவப்பு கம்பளத்தில் தோன்றினார். இவரது இந்த தோற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும், இந்த ஆண்டு இந்தியா சார்பில் நகைச்சுவை கலைஞர் விர் தாஸ் மற்றும் ‘Real Kashmir Football Club’ இணையத் தொடரும் விருதுப் பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. சர்வதேச மேடையில் விஜய் சேதுபதி விருது வழங்கியிருப்பது தமிழ் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.