மகளிர் அணிக்கு பாராட்டு.. கமலினிக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை – CM Vijay சர்பிரைஸ்

மதுரை கிரிக்கெட் வீராங்கனை கமலினிக்கு ரூ. 75 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்

20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 20 ஓவர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து, சிறப்பாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 45 பந்துகளில் 79 ரன்கள் விளாசினார். ஷபாலி வர்மா 29 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார். அதன்பின்னர் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 17 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து அவுடானார்

இறுதிக்கட்டத்தில் ரிச்சா கோஷ் அதிரடியாக விளையாடி 22 பந்துகளில் 49 ரன்கள் குவித்தார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 216 ரன்கள் குவித்தது. 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய இலங்கை மகளிர் அணி இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துகளை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்த விக்கெட்களை இழந்து தடுமாறினர்.

கேப்டன் சமாரி அதபத்து மட்டும் 21 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். கவிஷா தில்ஹாரி 13 பந்துகளில் 11 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் இலங்கை அணி 15.4 ஓவர்களில் 69 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 147 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.

இந்த நிலையில், தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த மதுரையைச் சேர்ந்த வீராங்கனை கமலினிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள முதல்வர் விஜய், அவருக்கு ஊக்கத்தொகையாக ரூ. 75 லட்சம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் விஜய் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட முதலமைச்சர்

அந்தப் பதிவில், “ஜப்பானில் நடைபெற்றுவரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் கிரிக்கெட் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய மகளிர் அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டின், மதுரையைச் சேர்ந்த வீராங்கனை கமலினிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன்.

கிரிக்கெட் வீராங்கனை கமலினியின் மகத்தான சாதனையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக ரூ. 75 லட்சம் வழங்கப்படும். இவரைப் போன்ற திறமைமிக்க அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் தமிழ்நாடு அரசு என்றும் உறுதுணையாக நிற்கும். கமலினியின் இந்த வெற்றி, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும், மகளிருக்கும் புதிய உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும். இவர் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்!” என அவர் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *