ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்! ஒடிசாவில் பள்ளிகளுக்கு விடுமுறை

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்! ஒடிசாவில் பள்ளிகளுக்கு விடுமுறை

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக ஒடிசாவின் கடலோர மற்றும் தெற்கு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மோசமான வானிலை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

குர்தா, ஜகத்சிங்பூர், கஞ்சம் மற்றும் கஜபதி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மல்கங்கிரி மாவட்டத்தில் செப்டம்பர் 24ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி மையங்களும் செப்டம்பர் 24ஆம் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், ஆசிரியர்கள் மற்றும் பிற பள்ளிப் பணியாளர்கள் பணிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவசரகால தேவைகளுக்காக பள்ளி வளாகங்கள் தயாராக இருக்கும் வகையில், சுழற்சி முறையில் பணியாற்றுமாறு பள்ளி முதல்வர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 22ஆம் தேதி நடைபெறவிருந்த தேசிய ஊரகத் திறனாய்வுத் தேர்வு, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேர்வு மையங்களில் திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஞ்சம், கோராபுட் மற்றும் கலாஹண்டி மாவட்டங்களில் அரசு ஊழியர்களின் விடுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் செப்டம்பர் 25ஆம் தேதி வரை தங்களது பணியிடங்களை விட்டு வெளியேறக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மோசமான வானிலை காரணமாக கஞ்சம் – கந்தமால் மாவட்டங்களை இணைக்கும் கலிங்கா காட் உள்ளிட்ட சில சாலைகளில் வாகனப் போக்குவரத்துக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சிலிகா ஏரியில் சதாபடா – ஜஹ்னிகுடா இடையேயான படகு சேவையும் செப்டம்பர் 25ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஒடிசாவின் கோபால்பூரிலிருந்து சுமார் 220 கி.மீ தொலைவிலும், ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்திலிருந்து சுமார் 320 கி.மீ தொலைவிலும் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், செப்டம்பர் 23ஆம் தேதி இரவு முதல் செப்டம்பர் 24ஆம் தேதி அதிகாலை வரையிலான காலகட்டத்தில் விசாகப்பட்டினம் மற்றும் கோபால்பூர் இடையே வடக்கு ஆந்திரம் – தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதியை கடக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஒடிசாவின் தெற்கு மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும். இதனால் நீர்த்தேக்கம், நகர்ப்புற வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஒடிசாவின் 11 மாவட்ட ஆட்சியர்கள் தீவிர எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மாநில தலைமைச் செயலாளர் அனு கார்க் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *