செழித்த வனம்… சுதந்திரமாக உலா வரும் சிறுத்தைகள்!
கோயம்புத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் பெய்த தொடர் மழையால், நீண்ட நாட்களாக வறண்டு காணப்பட்ட வனப்பகுதிகள் தற்போது பசுமை போர்த்தி புத்துயிர் பெற்றுள்ளன.
மழைக்குப் பிறகு வனப்பகுதி முழுவதும் புதிய புல்வெளிகளும் தாவரங்களும் துளிர்த்து, இயற்கையின் அழகிய காட்சியை வெளிப்படுத்தி வருகின்றன. இந்தப் பசுமையான சூழல் இயற்கை ஆர்வலர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்நிலையில், பசுமை போர்த்திய கோவை மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் சிறுத்தைகள் சுதந்திரமாக உலா வரும் அரிய காட்சிகள் கேமராவில் பதிவாகியுள்ளன.
கானுயிர் புகைப்படக் கலைஞர் ராஜ்குமார் நாராயணசாமி தனது கேமராவில் சிறுத்தைகளின் இந்த அழகிய நடமாட்டக் காட்சிகளைத் துல்லியமாகப் பதிவு செய்துள்ளார்.
மழையால் புத்துயிர் பெற்ற வனமும், அதில் இயல்பாக உலா வரும் கானுயிர்களும் மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை வளத்தையும் பல்லுயிர் பெருக்கத்தையும் அழகாக எடுத்துக்காட்டுகின்றன.
வன உயிரினங்களின் இயற்கையான வாழ்விடங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் இந்த அரிய காட்சிகள் மீண்டும் உணர்த்துகின்றன.


