சிக்கிமில் கனமழையால் நிலச்சரிவு.. பனிப்பாறை ஏரி உடையும் அபாயமா?
சிக்கிமில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ரிம்பி கிராமத்தில் மலைப்பகுதியில் இருந்து சேறு, மண் மற்றும் பாறைக் கழிவுகள் அதிவேகமாக கீழ்நோக்கி பாயும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

நிலச்சரிவு காரணமாக சில வீடுகள் சேதமடைந்ததுடன், சாலை இணைப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, இமயமலைப் பகுதிகளில் உள்ள பனிப்பாறை ஏரிகள் உடைந்து திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் குறித்தும் சுற்றுச்சூழல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக தீஸ்தா ஆற்றுப் படுகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர்மின் திட்டங்களுக்காக மலைப்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகள் குறித்து சூழலியல் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த 2023ஆம் ஆண்டு லோனக் பனிப்பாறை ஏரி உடைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் தீஸ்தா-III அணை கடுமையாக சேதமடைந்தது. இந்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, இமயமலைப் பகுதிகளில் கனமழை மற்றும் பனிப்பாறை ஏரி உடைப்பு போன்ற பேரிடர்களின் தாக்கம் குறித்து தொடர்ந்து கண்காணிப்பு அவசியம் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
