செய்திகள்

சென்னை உட்பட 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. நவம்பர் 18, 19-ல் கனமழை வெளுக்கும்!

சென்னை உட்பட 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. நவம்பர் 18, 19-ல் கனமழை வெளுக்கும்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று ஆந்திர கடற்கரையை நோக்கி நகர்ந்து வருவதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களுக்கு நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் ஆரஞ்சு அலர்ட் விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். மேலும், இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோல், கடலோர தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நவம்பர் 16-ம் தேதி புயலாகவும், நவம்பர் 17-ம் தேதி தீவிர புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 20-ம் தேதி நண்பகலில் நெல்லூர் – துனி இடையே ஆந்திரா மற்றும் ஏனாம் கடற்கரையை மிகத் தீவிர புயலாக கடக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

அப்போது மணிக்கு 120 முதல் 130 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 145 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நவம்பர் 21-ம் தேதி முதல் தமிழகத்தில் மழையின் தீவிரம் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.