மகளுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு.. .TVS குடும்ப சொத்து தகராறு சொல்வது என்ன?
தமிழகத்தின் பிரபல தொழில் நிறுவனமான TVS குடும்பத்தில் சொத்துப் பங்கீடு தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினை தற்போது பேசுபொருளாகியுள்ளது. TVS குழுமத்தின் தலைவர் வேணு சீனிவாசனின் மகள் டாக்டர் லட்சுமி வேணு, தனது தந்தைக்கு சொத்துகளை முறையாகப் பிரித்துக் கொடுக்கக் கோரி சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் மகன் சுதர்சன் வேணுவுக்கு அதிக சொத்து உரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும், தனக்கான உரிய பங்கு மறுக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த விவகாரத்தில் லட்சுமி வேணு, 1956-ம் ஆண்டு இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் 2005-ல் கொண்டுவரப்பட்ட திருத்தத்தை சுட்டிக்காட்டியுள்ளார். அதன்படி, இந்து கூட்டுக் குடும்பத்தின் பூர்வீக சொத்தில் மகனுக்கு இணையாக மகளுக்கும் உரிமை உண்டு என அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், தனது தாயார் மல்லிகா சீனிவாசனும் மகளின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்து கூட்டுக் குடும்பம் என்றால் என்ன?
இந்து கூட்டுக் குடும்பம் (Hindu Undivided Family – HUF) என்பது பொதுவான மூதாதையரிடமிருந்து வந்த குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாகும். இதில் அவர்களின் மனைவிகள் மற்றும் திருமணமாகாத மகள்களும் இடம்பெறுவர். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
இந்தக் குடும்பத்தின் சொத்துகளை நிர்வகிக்கும் தலைவருக்கு ‘கர்த்தா’ (Karta) என்று பெயர். குடும்பத்தின் மூத்த ஆண் உறுப்பினர் மட்டுமின்றி, குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மூத்த பெண் உறுப்பினரும் கர்த்தாவாகப் பொறுப்பேற்க முடியும்.
மகள்களுக்கு சம உரிமை வழங்கிய 2005 சட்டத்திருத்தம்!
2005-ம் ஆண்டுக்கு முன்பு இந்து கூட்டுக் குடும்பத்தின் பூர்வீக சொத்தில் மகன்களுக்கு மட்டுமே பிறப்புரிமை அடிப்படையில் சம பங்கு கோரும் உரிமை இருந்தது. ஆனால், இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் மூலம் மகள்களுக்கும் மகன்களுக்கு இணையான உரிமை வழங்கப்பட்டது.
இதன்படி, திருமணமான மகளாக இருந்தாலும், குடும்பத்தை விட்டு தனியாக வசித்தாலும் பூர்வீக கூட்டுக் குடும்பச் சொத்தில் அவருக்கான உரிமை தொடரும். மேலும், மகளும் சொத்துப் பிரிவினையைக் கோரி சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.
எந்த சொத்துகளுக்கு உரிமை கோர முடியும்?
பூர்வீக கூட்டுக் குடும்பச் சொத்துகளுக்கும், ஒருவர் தனது சொந்த வருமானத்தில் வாங்கிய தனிப்பட்ட சொத்துகளுக்கும் சட்டத்தில் வேறுபாடு உள்ளது. தனிப்பட்ட முறையில் ஒருவர் வாங்கிய சொத்து, அவர் கூட்டுக் குடும்பத்தில் உறுப்பினராக இருப்பதாலேயே தானாகவே குடும்பச் சொத்தாக மாறிவிடாது.
எனவே, சொத்தின் தன்மை, அது எவ்வாறு பெறப்பட்டது, யாருடைய பெயரில் உள்ளது போன்ற அம்சங்களைப் பொறுத்தே வாரிசுரிமை தீர்மானிக்கப்படும்.
சொத்துப் பிரிவினை என்றால் என்ன?
கூட்டுக் குடும்பச் சொத்துகளை குடும்ப உறுப்பினர்களுக்கிடையே சட்டப்படி பிரித்து வழங்குவதே சொத்துப் பிரிவினை எனப்படுகிறது. குடும்ப உறுப்பினர்கள் பரஸ்பர உடன்பாட்டின் மூலம் சொத்துகளைப் பிரித்துக் கொள்ளலாம். உடன்பாடு ஏற்படாத பட்சத்தில் நீதிமன்றத்தை அணுகியும் பிரிவினை கோரலாம்.
2005 சட்டத்திருத்தத்திற்குப் பிறகு, தகுதியுடைய மகள்களும் மகன்களுக்கு இணையாக சொத்துப் பிரிவினையைக் கோர முடியும்.
TVS குடும்பத்தில் என்ன பிரச்சினை?
TVS குடும்பத்தின் 2020-ம் ஆண்டு பெரிய அளவிலான குடும்ப ஏற்பாடு, வேணு சீனிவாசனின் குடும்பத்திற்குள் சொத்துகள் முறையாகப் பிரிக்கப்பட்டதைக் குறிக்காது என்பது லட்சுமி வேணுவின் வாதமாக உள்ளது. மேலும், TVS Holdings, TVS Motor Company, TVS Credit Services மற்றும் Sundaram-Clayton உள்ளிட்ட நிறுவனங்களில் உள்ள குடும்பத்தின் சொத்து உரிமைகள் முறையாகப் பிரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
இந்த விவகாரத்தில் லட்சுமியின் தாயார் மல்லிகா சீனிவாசன், மகனும் மகளும் சமமானவர்கள் என்றும், மகளுக்கும் உரிய பங்கு வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த குடும்பப் பிரச்சினை சட்டரீதியான கட்டத்தை எட்டியுள்ளதால், சொத்துகளின் தன்மை மற்றும் குடும்ப ஒப்பந்தங்களின் சட்டப்பூர்வ நிலை ஆகியவை அடுத்தகட்ட முடிவுகளில் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
