5 ஆண்டுகளுக்கு 3,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய டெண்டர்!
தமிழகத்தின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு 3,000 மெகாவாட் மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) புதிய டெண்டரை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் கோடைக்காலங்களில் மின்சாரத்தின் தேவை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வரும் 2027ஆம் ஆண்டில் எல் நினோ தாக்கம் காரணமாக வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என்றும், இதனால் மின்சாரப் பயன்பாடும் கொள்முதல் செலவும் உயர வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, குறுகிய கால ஒப்பந்தங்களுக்குப் பதிலாக நடுத்தர கால மின் கொள்முதல் ஒப்பந்தத்தின் அடிப்படையில் மின்சாரத்தைப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, 2027ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு 3,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதற்காக தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் உள்ள தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே மின்சாரக் கொள்முதலுக்காக வெளியிடப்பட்ட குறுகிய கால டெண்டர்களில் அதிக விலை கோரப்பட்டதுடன், போதிய நிறுவனங்களும் ஆர்வம் காட்டவில்லை. இதனால் எதிர்பார்த்த அளவுக்கு மின்சாரத்தைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.
தற்போது 5 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் மூலம் தேவையான மின்சாரத்தை முன்கூட்டியே உறுதி செய்வதுடன், விலை உயர்வையும் கட்டுப்படுத்த முடியும் என மின்வாரியம் எதிர்பார்க்கிறது.
கோடைக்கால மின்சாரத் தேவையைச் சமாளிக்க தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
