செய்திகள்

108 ஆம்புலன்ஸ் சேவையில் அதிரடி மாற்றம்.. கூடுதலாக 100 ஆம்புலன்ஸ்கள்!

108 ஆம்புலன்ஸ் சேவையில் அதிரடி மாற்றம்.. கூடுதலாக 100 ஆம்புலன்ஸ்கள்!

தமிழகத்தில் அவசரகால மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் வகையில், கூடுதலாக 100 புதிய 108 ஆம்புலன்ஸ்களை விரைவாகக் கொள்முதல் செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் செயல்பட்டு வரும் 108 அவசரகால மருத்துவ உதவி அழைப்பு மையத்தில் முதலமைச்சர் விஜய் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆம்புலன்ஸ் சேவைகளின் செயல்பாடுகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் அவசரகால மீட்புப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

குறிப்பாக, வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்படக்கூடிய வெள்ளம், புயல் மற்றும் கனமழை போன்ற இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ள 108 ஆம்புலன்ஸ் பிரிவு மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

மேலும், அவசர உதவி கோரி வரும் அழைப்புகளுக்கு ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அருகிலுள்ள ஆம்புலன்ஸ்களை அனுப்பும் நடைமுறை குறித்தும் கேட்டறிந்தார்.

இதைத்தொடர்ந்து, 104 சுகாதார உதவி எண், 14416 தொலைநிலை மனநலச் சேவை, 102 பிரசவத்துக்குப் பின்னர் தாய்மார்களை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் சேவை, 155377 இலவச அமரர் ஊர்தி சேவை ஆகியவற்றின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் உள்ள 38 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அவசர மருத்துவப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இங்கு சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ உள்ளிட்ட நவீன மருத்துவ வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அவசர மருத்துவச் சேவைகளின் தரத்தை மேம்படுத்தி, உயிரிழப்புகளைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.