செய்திகள்

பெண்கள் உயர்பதவியில் இருப்பது மட்டுமே சமத்துவம் அல்ல! நீதிபதி நாகரத்னா கருத்து

பெண்கள் உயர்பதவியில் இருப்பது மட்டுமே சமத்துவம் அல்ல! நீதிபதி நாகரத்னா கருத்து

பெண்கள் உயர் பதவிகளை வகிப்பது மட்டுமே சமூகத்தில் பாலின சமத்துவம் நிலவுவதை உறுதி செய்யாது என உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா தெரிவித்துள்ளார்.

நவம்பர் 18-ம் தேதி இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கார்னீலியா சொராப்ஜி நினைவு சொற்பொழிவில், இந்தியாவில் பெண்களின் உரிமைகள் மற்றும் சமத்துவம் குறித்து அவர் பேசினார்.

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்புத் திருத்தங்களை சுட்டிக்காட்டிய அவர், பெண்கள் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட இடங்களில் பங்கேற்பது அவசியம் என்றார். இருப்பினும், உயர் பதவிகளில் பெண்கள் இருப்பது மட்டுமே முழுமையான சமத்துவத்தை உறுதி செய்யாது எனக் குறிப்பிட்டார்.

பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு, சொத்துரிமை மற்றும் சட்ட உதவிகளைப் பெறுவதில் இன்னும் பல தடைகள் இருப்பதாகவும், குடும்பப் பொறுப்புகள் மற்றும் ஊதியமில்லாத வீட்டு வேலைகள் பெண்களின் வாழ்க்கைத் தேர்வுகளை பாதிப்பதாகவும் தெரிவித்தார்.

பெண்களுக்கு எதிரான வன்முறை, பொருளாதார சமத்துவமின்மை, பாதுகாப்பு மற்றும் சமூகத் தடைகள் தொடர்ந்து கவலைக்குரியவையாக உள்ளன. சட்டத்தில் உரிமைகள் வழங்கப்படுவது மட்டுமின்றி, பெண்கள் அவற்றை நடைமுறையில் அனுபவிக்கக்கூடிய சூழல் உருவாக வேண்டும் என்றும் நீதிபதி நாகரத்னா வலியுறுத்தினார்.