செய்திகள்

வாக்காளர் பட்டியல் திருத்தம்.. இந்தியா சிறுபான்மையினரை குறிவைப்பதாக அமெரிக்க அமைப்பு குற்றச்சாட்டு!

வாக்காளர் பட்டியல் திருத்தம்.. இந்தியா சிறுபான்மையினரை குறிவைப்பதாக அமெரிக்க அமைப்பு குற்றச்சாட்டு!

இந்தியாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மூலம் சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க மத சுதந்திர ஆணையம் (USCIRF) குற்றம்சாட்டியுள்ளது.

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் மூலம் சுமார் 13 கோடி பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நடவடிக்கை முஸ்லிம் வாக்காளர்களை அதிகம் பாதித்துள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

USCIRF தலைவர் ஆசிப் மஹ்மூத், முஸ்லிம் குடிமக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, அவர்கள் வெளிநாட்டவர்கள் என அடையாளப்படுத்தப்படுவதாகவும், நாடு கடத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இந்தியாவை மத சுதந்திரம் தொடர்பான கவலைக்குரிய நாடாக அறிவிக்க அமெரிக்க அரசை வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு இந்திய தேர்தல் ஆணையம், இறந்தவர்கள், இடம் மாறியவர்கள், இரட்டைப் பதிவுகள் மற்றும் தகுதியற்ற வாக்காளர்களின் பெயர்களே நீக்கப்படுவதாக விளக்கம் அளித்துள்ளது. தவறுதலாக பெயர்கள் நீக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுகளை இந்தியா நிராகரித்து வரும் நிலையில், USCIRF-ன் கருத்துகள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாகவும் விமர்சித்துள்ளது.