COP31 மாநாட்டில் தமிழரின் குரல்! காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வலியுறுத்தல்
துருக்கியின் Antalya நகரில் நடைபெற்ற ஐ.நா. COP31 காலநிலை மாநாட்டில், புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அரசுகள், நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
நவம்பர் 19-ம் தேதி நடைபெற்ற சர்வதேச காலநிலை செயல் மன்றம் 2030 நிகழ்வில், ‘உறுதிமொழிகளைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வருதல்’ என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார். அப்போது, “நீரின்றி அமையாது உலகு” என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி, நீர்வளப் பாதுகாப்பு மற்றும் இயற்கையைப் பாதுகாப்பதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.
அமேசான் மழைக்காடுகள் அழிந்து வருவது உலகளவில் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக எச்சரித்த அவர், இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சி, சூரிய மின்சக்தி பயன்பாடு மற்றும் விவசாயக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதன் முக்கியத்துவத்தையும் பேசினார்.
2035-ம் ஆண்டுக்குள் வளரும் நாடுகளுக்கு ஆண்டுதோறும் 300 பில்லியன் டாலர் காலநிலை நிதி வழங்கப்பட வேண்டும் என்றும், நிதியை 1.3 டிரில்லியன் டாலராக உயர்த்தும் இலக்கை அடைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தமிழகத்தின் 1,076 கி.மீ. கடற்கரையில் 608 மீனவக் கிராமங்களும், புதுச்சேரியில் 38 மீனவக் கிராமங்களும் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கடல் அரிப்பு பாதிப்புகள் அதிகரித்து வருவதாகவும் சுட்டிக்காட்டினார். கடலோரப் பாதுகாப்பை வலுப்படுத்த அலையாத்திக் காடுகளைப் பாதுகாப்பதுடன், அறிவியல் அடிப்படையிலான நிரந்தரத் தடுப்பு கட்டமைப்புகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், புதுச்சேரியில் அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அரசு கட்டடங்களில் சோலார் பேனல்கள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கல்லணை, ஏரி–குள இணைப்பு, குடிமராமத்து போன்ற பாரம்பரிய நீர்வளப் பாதுகாப்பு முறைகளை மீண்டும் ஊக்குவித்து, மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர்நிலைகளை மீட்டெடுப்பதில் பொதுமக்களும் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தினார்.
