செய்திகள்

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்… உச்சநீதிமன்றத்தில் 17 பக்க அறிக்கை தாக்கல் செய்த மதுரை ஆட்சியர்!

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்... உச்சநீதிமன்றத்தில் 17 பக்க அறிக்கை தாக்கல் செய்த மதுரை ஆட்சியர்!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படாத விவகாரம் தொடர்பாக, மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா உச்சநீதிமன்றத்தில் 17 பக்கங்கள் கொண்ட அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார்.

உச்சநீதிமன்றம் கடந்த நவம்பர் 20ஆம் தேதி பிறப்பித்த இடைக்கால உத்தரவின்படி, நவம்பர் 24ஆம் தேதி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், நீதிமன்ற உத்தரவின்படி அங்கு தீபம் ஏற்றப்படாமல், வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே உள்ள தீப மண்டபத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

இதுகுறித்து தனது அறிக்கையில் விளக்கமளித்துள்ள மாவட்ட ஆட்சியர், தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான நபர்களை தேவஸ்தானம் அமைத்துப் பரிந்துரைக்கவில்லை என்றும், இதனால் உச்சநீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், தீபம் ஏற்றுவது தொடர்பாக நவம்பர் 20 மற்றும் 21ஆம் தேதிகளில் வருவாய்த்துறை, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தீபம் ஏற்றுவதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதாகத் தகவல் கிடைத்ததால், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் நோக்கில் BNSS பிரிவு 163-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் அறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாதது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்துள்ள இந்த அறிக்கை, திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் அடுத்தகட்ட விசாரணையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.