செய்திகள்

தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்… அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்... அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆளும் தவெக அரசு, தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு வங்கத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள பாஜக அரசு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, மாதந்தோறும் மின்கட்டணக் கணக்கீடு, வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை மற்றும் ஒரு லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேபோன்ற வாக்குறுதிகளை தமிழகத்தில் தவெகவும் தேர்தலின்போது அளித்திருந்ததாகக் குறிப்பிட்ட அவர், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் கணக்கிடும் முறையை மாற்றி மாதந்தோறும் கணக்கிடும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்றார்.

மேலும், வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 உதவித்தொகை வழங்குதல், அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல் போன்ற வாக்குறுதிகளும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிய பின்னரே மாதாந்திர மின்கட்டணக் கணக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என அரசு கூறுவதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

தேர்தலின்போது எந்த நிபந்தனைகளும் இன்றி அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை, ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு காரணங்களைக் கூறி தாமதப்படுத்துவது சரியல்ல என்றும் அன்புமணி விமர்சித்துள்ளார்.

எனவே, தமிழக மக்கள் தவெக மீது வைத்துள்ள நம்பிக்கையைத் தக்கவைத்துக் கொள்ளும் வகையில், தேர்தல் வாக்குறுதிகளை உரிய காலக்கெடுவுக்குள் நிறைவேற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.