செய்திகள்

11 ஆண்டுகளுக்குப் பிறகு ஃப்ளிப்கார்ட் CEO பதவியிலிருந்து விலகும் கல்யாண் கிருஷ்ணமூர்த்தி!

11 ஆண்டுகளுக்குப் பிறகு ஃப்ளிப்கார்ட் CEO பதவியிலிருந்து விலகும் கல்யாண் கிருஷ்ணமூர்த்தி!

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி தனது பதவியிலிருந்து விலக உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவனத்துடன் பயணித்து வந்த அவர், தற்போது தனது பொறுப்பிலிருந்து விலகுகிறார்.

கல்யாண் கிருஷ்ணமூர்த்தி கடந்த 2013-ம் ஆண்டு ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தில் நிதிப் பிரிவில் இணைந்தார். பின்னர் டைகர் குளோபல் நிறுவனத்திற்குச் சென்ற அவர், 2016-ம் ஆண்டு மீண்டும் ஃப்ளிப்கார்ட்டில் இணைந்தார். தொடர்ந்து 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றார். 2018-ல் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உயர்ந்தார்.

அவரது தலைமையின் கீழ் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் வர்த்தகம் ஐந்து மடங்கிற்கும் மேலாக வளர்ச்சியடைந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், பிக் பில்லியன் டேஸ் விற்பனை நிகழ்வு இந்தியாவின் முக்கிய பண்டிகைக் கால ஆன்லைன் ஷாப்பிங் நிகழ்வாக உருவெடுத்ததிலும் அவரது பங்கு குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கல்யாண் கிருஷ்ணமூர்த்திக்குப் பதிலாக புதிய தலைமைச் செயல் அதிகாரி யார் என்பது அடுத்த சில வாரங்களில் அறிவிக்கப்படும் என ஃப்ளிப்கார்ட் தெரிவித்துள்ளது. அதுவரை நிறுவனத்தின் தலைமை தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப அதிகாரியான பாலாஜி தியாகராஜன் மற்றும் நிறுவனத்தின் நிர்வாகக் குழு இணைந்து இடைக்காலப் பொறுப்புகளை கவனிக்க உள்ளனர்.

இந்திய ஆன்லைன் வர்த்தகத் துறையில் முக்கிய நிறுவனமாகத் திகழும் ஃப்ளிப்கார்ட்டில் ஏற்பட்டுள்ள இந்தத் தலைமை மாற்றம் தற்போது கவனம் பெற்றுள்ளது.