ஜனவரி 29-ல் வெளியாகும் மணிரத்னத்தின் ‘இஞ்சி வெல்லம்’!
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படம் 2027ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
முன்னதாக ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் மூலம் வெற்றிக் கூட்டணியாக உருவெடுத்த லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மணிரத்னம் மீண்டும் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். காதல் மற்றும் மனித உறவுகளை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
மேலும், கன்னட நடிகை சைத்ரா ஆச்சார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பல மொழித் திரைப்படங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ள இவர், இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் கூடுதல் கவனம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்திற்கு ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவில் கொல்கத்தாவின் அழகிய காட்சிகளுடன் பிட் டிராக் பாடலும் இடம்பெற்றிருந்தது. இந்த வீடியோ ரசிகர்களிடையே நல்ல கவனத்தைப் பெற்றுள்ளது.
தற்போது படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே படத்தின் முதல் பாடல், இசை வெளியீட்டு விழா மற்றும் டிரெய்லர் குறித்த அறிவிப்புகளை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மணிரத்னம் – ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படம் 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகும் முக்கியத் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
