செய்திகள்

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ். கர்ணன் காலமானார்!

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ். கர்ணன் காலமானார்!

சென்னை மற்றும் கொல்கத்தா உயர் நீதிமன்றங்களில் நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற சி.எஸ். கர்ணன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று (நவம்பர் 13) காலமானார். அவருக்கு வயது 71.

கடலூர் மாவட்டம் கர்நாதம் கிராமத்தில் கடந்த 1955ஆம் ஆண்டு பிறந்தவர் சி.எஸ். கர்ணன். சென்னை சட்டக் கல்லூரியில் 1983ஆம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்த இவர், வழக்கறிஞராகத் தனது பணியைத் தொடங்கினார். பின்னர், 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2011ஆம் ஆண்டு நிரந்தர நீதிபதியாகப் பொறுப்பேற்றார்.

தொடர்ந்து, 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சுமார் 8 ஆண்டுகளுக்கும் மேலாக உயர் நீதிமன்றங்களில் பணியாற்றிய இவர், 2017ஆம் ஆண்டு நீதிபதி பணியிலிருந்து ஓய்வுபெற்றார்.

நீதித்துறையில் பெரும் சர்ச்சை!

நீதிபதியாகப் பணியாற்றிய காலத்தில் சக நீதிபதிகள் மீது ஊழல் மற்றும் சாதியப் பாகுபாடு தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.

குறிப்பாக, 2017ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து உத்தரவுகளைப் பிறப்பித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, உச்ச நீதிமன்றம் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொண்டது. 2017 மே 9ஆம் தேதி 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு அவருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்தது. இந்தியாவில் பதவியில் இருந்த உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு நீதிமன்ற அவமதிப்புக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முதல் நிகழ்வாக இது அமைந்தது.

இந்த நிலையில், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உ*ரிழந்தார்.