செய்திகள்

ஒரே நாளில் 12 பேர் மாயம்… காவல்துறை என்ன செய்கிறது?

ஒரே நாளில் 12 பேர் மாயம்... காவல்துறை என்ன செய்கிறது?

கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 7 இளம் பெண்கள் உட்பட 12 பேர் காணாமல் போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காணாமல் போனவர்களில் 16 வயது சிறுவன் மற்றும் 17 வயது சிறுமியும் அடங்குவர். இதுதொடர்பாக அந்தந்த காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு, அவர்களைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தச் சம்பவம் குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரே நாளில் 12 பேர் காணாமல் போகும் அளவிற்கு காவல்துறையின் கண்காணிப்பு பலவீனமாகிவிட்டதா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், 7 இளம் பெண்கள் காணாமல் போன விவகாரத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் என்னவாயின என்றும், சிறார்களின் பாதுகாப்பிற்காக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

காணாமல் போன அனைவரையும் விரைந்து மீட்டு, அவர்கள் மாயமானதற்கான பின்னணியைக் கண்டறிய வேண்டும் என்றும், குற்றச்செயல் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.