செய்திகள்

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை.. பிரபல Instagram Influencer மீனாட்சி கைது!

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை.. பிரபல Instagram Influencer மீனாட்சி கைது!

மதுரையில் நடைபெற்ற தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் பிரபல Instagram Influencer மீனாட்சி நாச்சியார் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை பழங்காநத்தம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள தனிஷ்க் நகைக்கடையில் கடந்த நவம்பர் 12ஆம் தேதி அதிகாலை கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. இதில் சுமார் ரூ.20 கோடி மதிப்பிலான 15 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கடையில் இருந்த CCTV காட்சிகள் மற்றும் பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். இதில் நிஷாந்த் என்ற நபர் முக்கிய சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டார்.

விசாரணையில், கொள்ளைச் சம்பவத்திற்குப் பிறகு நிஷாந்த், தனது தோழியான Instagram Influencer மீனாட்சியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீனாட்சியிடம் பாதுகாப்பாக வைத்திருக்க கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து மீனாட்சி நாச்சியார் மற்றும் நிஷாந்தின் தந்தை சுரேஷ் ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் 5 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, இந்தக் கொள்ளை வழக்கில் முக்கிய சந்தேக நபராகக் கருதப்படும் நிஷாந்த் தலைமறைவாக உள்ளார். அவரைப் பிடிக்க போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவம் மதுரை மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.