சிறார் குற்றவாளிகளின் வயது வரம்பு 18-ல் இருந்து 16 ஆக குறைக்கப்படுமா? கேரள உயர் நீதிமன்றம் பரிந்துரை!
சிறார் குற்றவாளிகளாகக் கருதப்படுவதற்கான வயது வரம்பை 18-ல் இருந்து 16 ஆகக் குறைப்பது குறித்து சட்டமன்றங்கள் ஆலோசித்து உரிய சட்டத் திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என கேரள உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கேரளாவில் சமீபகாலமாக சிறுவர்கள் கடுமையான குற்றச் செயல்களில் ஈடுபடுவது மற்றும் மதுபானம் அருந்திவிட்டு வாகன விபத்துகளை ஏற்படுத்துவது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், இந்தக் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கேரள மாநிலத்தில் 23 வயதுக்கு குறைவானவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்வதற்கும், வழங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ள சட்டப் பிரிவுகளை முறையாக அமல்படுத்த வேண்டும் எனக் கோரி கொல்லத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் வினோத் விக்ரமன் பிள்ளை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ. பதருதீன், தற்போதைய சூழலில் 16 வயதிலேயே குழந்தைகள் போதுமான மன முதிர்ச்சியைப் பெற்றிருப்பதாகக் குறிப்பிட்டு, சிறார் நீதிச் சட்டத்தில் வயது வரம்பைக் குறைப்பது குறித்து சட்டமன்றங்கள் பரிசீலிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
மேலும், மதுபானம் எளிதில் கிடைப்பதால் 18 வயதுக்குட்பட்டவர்கள் மது அருந்திவிட்டு உயிரிழப்புகளை ஏற்படுத்தும் விபத்துகளில் ஈடுபடுவது குறித்தும் நீதிமன்றம் கவலை தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து, மதுபான விற்பனை தொடர்பான சட்ட விதிமுறைகள் எவ்வாறு அமல்படுத்தப்படுகின்றன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கலால் துறை ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நவம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
