இசைப் பயணத்தில் 15 ஆண்டுகள்! ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அனிருத் ரவிச்சந்தர்!
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் ரவிச்சந்தர், தனது இசைப் பயணத்தில் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை முன்னிட்டு தனது இசைப் பயணத்தின் நினைவுகளையும், ரசிகர்களுக்கு நன்றியையும் சமூக வலைத்தளப் பதிவு மூலம் பகிர்ந்துள்ளார்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தனது முதல் பாடல் வெளியானதாகக் குறிப்பிட்டுள்ள அனிருத், அன்று தொடங்கிய பயணம் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் எனப் பல்வேறு மொழிகளில் இசையமைத்ததுடன், சர்வதேச இசைக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்ததாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும், நாட்டின் முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்களையும் நினைவுகூர்ந்துள்ளார்.
தனது பாடல்கள் கோடிக்கணக்கான ரசிகர்களைச் சென்றடைந்தது, இசை ஸ்ட்ரீமிங் தளங்களில் சாதனைகள் படைத்தது, உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி அரங்குகள் நிரம்பியதைக் கண்டது எனப் பல மறக்க முடியாத தருணங்களைப் பகிர்ந்துள்ளார்.
குறிப்பாக, 2026ஆம் ஆண்டு வெளியான மற்றும் வெளியாகவுள்ள LIK, ஜனநாயகன், DC, பாரடைஸ் மற்றும் ஜெயிலர் 2 உள்ளிட்ட திரைப்படங்கள் தனது 15 ஆண்டு இசைப் பயணத்திற்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது புதிய முயற்சியான Albuquerque Records மூலம் அடுத்த தலைமுறை இசைக் கலைஞர்களுக்கும் திறமையாளர்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இசைப் பயணத்தின் ஒவ்வொரு வெற்றிக்கும் ரசிகர்களின் அன்பும் ஆதரவுமே காரணம் எனக் குறிப்பிட்ட அனிருத், தொடர்ந்து இசைப் பணிகளில் ஈடுபட உள்ளதாகவும், தனது பயணம் இப்போதுதான் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
15 ஆண்டுகள் கடந்தாலும், இன்னும் பல புதிய இசை முயற்சிகளையும் கனவுகளையும் நோக்கிப் பயணிக்கத் தயாராக இருப்பதாகக் கூறி ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
