ஆந்திராவை நோக்கி நகரும் ‘அக்வன்’ புயல்! நவம்பர் 20-ல் கரையைக் கடக்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று, நவம்பர் 20ஆம் தேதி ஆந்திரப் பிரதேச கடற்கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
தற்போது தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது நவம்பர் 16ஆம் தேதி மாலைக்குள் புயலாகவும், நவம்பர் 17ஆம் தேதி தீவிரப் புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளது. தொடர்ந்து நவம்பர் 19ஆம் தேதி இரவு மிகத் தீவிரப் புயலாக மாறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நவம்பர் 20ஆம் தேதி நண்பகலுக்குள் நெல்லூர் மற்றும் தூணி இடையே ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரைப் பகுதிகளில் புயல் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. அப்போது மணிக்கு 120 முதல் 130 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், இடையிடையே 145 கி.மீ. வேகம் வரை காற்று வீசலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஆந்திரப் பிரதேச மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என்பதால் விவசாயிகளும் பொதுமக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், ஒடிசா மாநிலத்தின் தெற்குப் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், தாழ்வான பகுதிகள் மற்றும் நிலச்சரிவு அபாயம் உள்ள இடங்களில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்கள் அடுத்தடுத்து புயல்களின் பாதிப்புகளைச் சந்தித்துள்ள நிலையில், தற்போது உருவாகியுள்ள அக்வன் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
