450 டன் பட்டாசுக் கழிவுகள்.. ஒரே புகை மூட்டம்.. – சென்னை தீபாவளியின் மற்றொரு முகம்!
தீபாவளியை ஒட்டி சென்னையின் பல இடங்களில் பட்டாசு வெடித்ததனால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் பல இடங்களில் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்
தீபாவளி முடிந்துவிட்டது. பலகாரம், பட்டாசு என கொண்டாட்டங்கள் நிறைந்த தீபாவளி முடியும் தருவாயில் அது பெருநகரங்களுக்கு மிகப்பெரிய எச்சரிக்கையை விட்டுச் சென்றிருக்கிறது.
சென்னை, டெல்லி போன்ற இந்தியாவின் பெருநகரங்கள் நேற்று உலக வரைபடத்திலிருந்து காணாமல் போனது போல முழுவதும் புகை மண்டலங்களால் நிரம்பி வழிந்தது.

ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு 20 லட்சம் மக்கள் அரசு மற்றும் தனியார் போக்குவரத்து மூலமாக சென்னையை விட்டு தங்கள் சொந்த ஊருக்கு செல்கிறார்கள். இதுதவிர தங்களது சொந்த வாகனங்கள் மூலம் சொந்த ஊருக்கு செல்லும் ஒரு பெரும் கூட்டமும் உண்டு.
20 முதல் 25 லட்சம் மக்கள் சென்னையிலிருந்து வெளியேறிய பின்னரும் சென்னையில் எப்படி இவ்வளவு புகை மூட்டம்?

சென்னையில் நேற்று காலை முதல் இரவு வரை லேசான முதல் மிதமான மழை பெய்தது. கொட்டும் மழை காரணமாக காலையிலிருந்து பெரிதாக யாரும் பட்டாசுகளை வெடிக்கவில்லை. மொத்த பட்டாசும் இரவு முழுவதும் வெடித்ததில் காற்றின் தரன் மிக மோசமான உச்சத்தை அடைந்தது
சென்னையின் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு 206 என்ற அளவை எட்டி மோசமான நிலையை அடைந்தது.
மணலியில் அதிகபட்சமாக 269 என்ற அளவிலும், அரும்பாக்கத்தில் 243 என்ற அளவிலும் காற்றின் தரக்குறியீடு பதிவானது. இதேபோல புதுச்சேரியில் 217 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு பதிவானது

நேற்று இரவு புகை மூட்டத்துடன் காணப்பட்டதால் சென்னையின் பல இடங்களில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். குறிப்பாக சைதாப்பேட்டை, கத்திப்பாரா மேம்பாலத்திற்கு கீழே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். அதேபோல பலருக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்னைகளால் அவதிப்பட்டதாக தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்
புகை மூட்டத்தால் ஏற்பட்ட காற்று மாசு ஒருபுறம் என்றால் பட்டாசுக் கழிவுகளின் அளவு அதைவிடக் கொடூரமானது. சென்னையில் இன்று காலை நிலவரப்படி 450டன் பட்டாசுக் கழிவுகள் சேர்ந்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
உயிரினங்களுக்கும் இடையூறு இல்லாமல், இயற்கைக்கு இடையூறு இல்லாமல் சக மனிதர்களுக்கு இடையூறு இல்லாமல் பண்டிகைகளை கொண்டாடுவோம்.
