தமிழகத்தில் 3,665 காவல்துறை பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு!
தமிழகத்தில் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள 3,665 பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) நடத்திய பொதுத் தேர்வு 2025க்கான தேர்வு முடிவுகள் மற்றும் தேர்வுப் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதில் இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆகிய பணியிடங்கள் அடங்கும். கடந்த 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான எழுத்துத் தேர்வு நவம்பர் 9ஆம் தேதி நடைபெற்றது.
மொத்தமுள்ள 3,665 பணியிடங்களில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் 68 பேர் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 3,597 பேருக்கான தற்காலிகத் தேர்வுப் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் மருத்துவப் பரிசோதனை, கல்விச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நன்னடத்தை தொடர்பான பின்னணி சரிபார்ப்பு உள்ளிட்ட அடுத்தகட்ட நடைமுறைகளில் பங்கேற்க வேண்டும்.
தேர்வர்கள் தங்களது தேர்வு விவரங்களை TNUSRB-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnusrb.tn.gov.in/ என்ற முகவரியில் சென்று தெரிந்துகொள்ளலாம். இந்தத் தற்காலிகப் பட்டியல் இறுதியான பணி நியமன ஆணையாகாது என்பது குறிப்பிடத்தக்கது.
