செய்திகள்

GTA 6 ரிலீஸுக்காக ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்த சென்னை நிறுவனம்! இன்டர்ன்ஸ், ஃப்ரீலான்ஸர்களுக்கும் ஜாக்பாட்!

GTA 6 ரிலீஸுக்காக ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்த சென்னை நிறுவனம்! இன்டர்ன்ஸ், ஃப்ரீலான்ஸர்களுக்கும் ஜாக்பாட்!

உலகம் முழுவதும் வீடியோ கேம் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் GTA 6 கேம் நாளை (நவம்பர் 19) வெளியாக உள்ளது. இதையொட்டி, சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு ஒரு நாள் விடுமுறை அறிவித்துள்ளது.

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உள்துறை வடிவமைப்பு நிறுவனமான Inde by ChairsCarte இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, நவம்பர் 19-ஆம் தேதி அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மட்டுமின்றி, இன்டர்ன்கள் மற்றும் ஃப்ரீலான்ஸர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி கிஷோர் சண்முகம் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், GTA கேம் தொடருக்காகத் தங்கள் குழுவினர் பல ஆண்டுகளாகக் காத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, சிறுவயதில் விளையாடிய Vice City, GTA V, இரவு நேர கேமிங் அனுபவங்கள் மற்றும் அந்த விளையாட்டுகளுடன் தொடர்புடைய நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.

மேலும், GTA 6 வெளியீட்டை மற்றொரு சாதாரண வியாழக்கிழமையாகக் கருத விரும்பவில்லை என்றும், ஊழியர்கள் எந்தவிதமான வேலை அழுத்தமும் இல்லாமல் விளையாட்டை ரசிக்க இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. நிறுவனத்தின் ஊழியர்களுக்கு ஆதரவாகப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். சிலர் அந்த நிறுவனத்தில் வேலைவாய்ப்பு உள்ளதா என்றும் நகைச்சுவையாகக் கேட்டு வருகின்றனர்.

இதற்கு முன்பாக Logitech நிறுவனமும் தனது உலகளாவிய ஊழியர்களுக்கு கேமிங் செய்வதற்காக ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.