செய்திகள்

தமிழகத்தில் இனி புதிதாக டாஸ்மாக் கடைகள் திறக்கக் கூடாது! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் இனி புதிதாக டாஸ்மாக் கடைகள் திறக்கக் கூடாது! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் ஏற்கெனவே போதுமான எண்ணிக்கையில் மதுபானக் கடைகள் உள்ளதால், இனி புதிதாக டாஸ்மாக் கடைகளைத் திறக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் நவக்கிணத்தப்பட்டி கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறி, அப்பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். கிராம மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, புதிய மதுபானக் கடை திறக்கத் தடை விதிக்க வேண்டும் என அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் ஏற்கெனவே அதிக எண்ணிக்கையில் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருவதாகவும், கூடுதலாக புதிய கடைகளைத் திறக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மேலும், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் புதிதாக எந்த டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் திறக்கக் கூடாது என மாநிலம் முழுவதற்கும் உத்தரவிட்டனர்.

இதையடுத்து, மனுவை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவு தமிழகத்தில் புதிய டாஸ்மாக் கடைகள் திறப்பது தொடர்பான அரசின் நடவடிக்கைகளில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இருப்பினும், ஏற்கெனவே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பாக இந்த உத்தரவில் எந்தத் தனிப்பட்ட உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.