செய்திகள்

இனி ஆன்லைனில் புகார் அளித்து e-CSR பெறலாம்! தமிழக காவல்துறையின் புதிய வசதி அறிமுகம்!

இனி ஆன்லைனில் புகார் அளித்து e-CSR பெறலாம்! தமிழக காவல்துறையின் புதிய வசதி அறிமுகம்!

தமிழக காவல்துறையில் பொதுமக்கள் புகார் அளிக்கும் நடைமுறையை எளிமைப்படுத்தும் வகையில் புதிய e-CSR வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் இணையதளம் வாயிலாக புகார் அளித்து, புகார் பதிவு செய்யப்பட்டதற்கான மின்னணு ஒப்புகையைப் பெற முடியும்.

தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால் இந்த வசதியை அறிமுகப்படுத்தினார். இதுவரை புகார் அளித்தவர்கள் CSR ரசீதைப் பெற காவல் நிலையத்திற்கு நேரில் செல்ல வேண்டிய நிலை இருந்தது. தற்போது காவல்துறை இணையதளத்தில் ‘Register Complaint / e-CSR’ வசதியைத் தேர்வு செய்து புகார் அளிக்கலாம்.

புகார் பதிவு செய்யப்பட்டவுடன் தனித்துவமான e-CSR எண் கொண்ட ஒப்புகை குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். பின்னர் புகார் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டு விசாரணை தொடங்கப்படும். தேவையான ஆவணங்களுடன் 3 நாட்களுக்குள் காவல் நிலையத்திற்கு வர வேண்டிய விவரமும் SMS மூலம் தெரிவிக்கப்படும்.

விசாரணைக்குப் பிறகு வழக்கமான CSR பதிவு செய்வது, FIR பதிவு செய்வது அல்லது உரிய காரணங்களுடன் புகாரை முடிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் மூத்த குடிமக்களின் புகார்கள் முன்னுரிமையுடன் விசாரிக்கப்படும்.

மேலும், புகார்களின் நிலை மற்றும் நடவடிக்கைகளை உயர் அதிகாரிகள் கண்காணிக்க பிரத்யேக Dashboard வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. செல்போன் திருட்டு, இருசக்கர வாகன திருட்டு உள்ளிட்ட புகார்களுக்கு e-FIR வசதியை விரிவுபடுத்தவும் காவல்துறை திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய வசதி புகார் அளிக்கும் நடைமுறையை எளிதாக்குவதுடன், புகார்கள் மீதான நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.