ரூ.174.97 கோடியில் 12 திட்டங்கள் திறப்பு! சென்னையில் 5.3 கி.மீ. பசுமை வழித்தடம் அமைக்க அடிக்கல்!
தமிழகத்தில் நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் மக்கள் பயன்பாட்டுக்கான வசதிகளை மேம்படுத்தும் வகையில் ரூ.174.97 கோடி மதிப்பிலான 12 முடிவுற்ற திட்டங்களை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்துள்ளார். மேலும், சென்னை விமான நிலையப் பகுதியில் ரூ.11.15 கோடி மதிப்பிலான 2 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், மணலி பகுதியில் ரூ.58.33 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட கடப்பாக்கம் ஏரி, புளியந்தோப்பில் ரூ.35 கோடியில் அமைக்கப்பட்ட கழிவுமாற்று நிலையம், மாத்தூர் பகுதியில் ரூ.4 கோடியில் உருவாக்கப்பட்ட நீர் உறிஞ்சும் பூங்கா உள்ளிட்ட திட்டங்கள் திறந்து வைக்கப்பட்டன.

நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் சார்பில் ரூ.73.64 கோடி செலவில் மதுரை வெங்காயச் சந்தை, விருத்தாசலம் நவீன காய்கறிச் சந்தை, திட்டக்குடி அரசு மருத்துவமனை கூடுதல் கட்டடம், இராணிப்பேட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், கொமாரபாளையம் புதிய பேருந்து நிலையங்கள், பொள்ளாச்சி விளையாட்டு அரங்கம் மற்றும் வெள்ளக்கோவில் குடிநீர் மேம்பாட்டுப் பணிகள் திறந்து வைக்கப்பட்டன.

மேலும், கோட்டூர்புரத்தில் ரூ.4 கோடி செலவில் அமைக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும் திறக்கப்பட்டது. இதன் மூலம் தினமும் 10 லட்சம் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்க முடியும்.
சென்னை விமான நிலைய நுழைவுவாயில் முதல் கிண்டி கத்திப்பாரா சந்திப்பு வரை 5.3 கி.மீ. நீள பசுமை வழித்தடம் மற்றும் விமான நிலையம் அருகே பூங்கா அமைக்கும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
