குடியரசுத் துணைத் தலைவர் வருகை.. சென்னையில் 2 நாட்களுக்கு ட்ரோன் பறக்க தடை!
குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் சென்னை வருகையை முன்னிட்டு, சென்னையில் குறிப்பிட்ட பகுதிகளில் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி கருவிகளைப் பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 21 மற்றும் 22-ம் தேதிகளில் குடியரசுத் துணைத் தலைவர் சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள கொட்டிவாக்கம் நெல்லை நாடார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 42-வது ஆண்டு விழாவில் நவம்பர் 21-ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு அவர் பங்கேற்கிறார். மேலும், நெல்லை நாடார் பொறியியல் கல்லூரி ஆண்கள் விடுதியையும் திறந்து வைக்க உள்ளார்.
இதையொட்டி மீனம்பாக்கம், கொட்டிவாக்கம், கிண்டி, நீலாங்கரை, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளும், அவர் பயணிக்கும் வழித்தடங்களும் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பகுதிகளில் அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தவிர, ட்ரோன் கேமராக்கள் மற்றும் ஆளில்லா வான்வழி கருவிகளை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே சென்னை பெருநகரப் பகுதிகளில் ட்ரோன்கள் உள்ளிட்ட பறக்கும் கருவிகளுக்கு டிசம்பர் 15-ம் தேதி வரை தடை அமலில் உள்ள நிலையில், குடியரசுத் துணைத் தலைவர் வருகையையொட்டி கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
