வி.எஸ். பாபுவின் இறுதி ஊர்வலத்தில் உருக்கமான காட்சிகள்.. உடலை சுமந்து சென்ற விஜய்!
மறைந்த தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் இறுதி ஊர்வலத்தில் முதலமைச்சர் விஜய் பங்கேற்று, அவரது உடலைத் தோளில் சுமந்து சென்ற காட்சிகள் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தின.
கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வீழ்த்தி வெற்றி பெற்ற வி.எஸ். பாபு, கடந்த செப்டம்பர் மாதம் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 72 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மறைவு தவெக தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் திரண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். முதலமைச்சர் விஜயும் நேரில் சென்று மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதுடன், குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் வி.எஸ். பாபுவின் உடலை உறவினர்களுடன் இணைந்து விஜய் தனது தோளில் சுமந்து சென்றார். பின்னர் இறுதி ஊர்வலத்தில் உடல் கொண்டு செல்லப்பட்ட வாகனத்தின் பின்னால் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் விஜயும் நடந்து சென்றார்.
அப்போது பாபுவின் மகன்கள் கண்ணீர் விட்டு அழுத நிலையில், அவர்களை அரவணைத்து ஆறுதல் கூறியபடி விஜய் சென்ற காட்சிகளும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தின.
திருவிக நகர் மின்மயானம் வரை நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்று வி.எஸ். பாபுவுக்கு இறுதி விடை கொடுத்தனர்.
