ரூ.9,063 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி.. 13.25 லட்சம் விவசாயிகளுக்கு பயன்!
தமிழக விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தை அரசு விரிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம் மொத்தம் ரூ.9,063 கோடி மதிப்பிலான பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, சுமார் 13.25 லட்சம் விவசாயிகள் பயன்பெற உள்ளனர்.
கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டத்தின் கீழ், கடன் பெறுவதற்கான காலக்கெடு 2026 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2026 பிப்ரவரி 28 வரை பெற்ற கடன்கள் மட்டுமே தகுதி பெற்றிருந்தன.
தற்போதைய திருத்தத்தின்படி, ரூ.75,000 வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு முழு கடன் தொகையும் தள்ளுபடி செய்யப்படும். ரூ.75,000-க்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75,000 வரை தள்ளுபடி வழங்கப்படும்.
இந்த விரிவாக்கத்தின் மூலம் புதிதாக 41,342 விவசாயிகள் பயனடைய உள்ளனர். ஏற்கெனவே கடனை திருப்பிச் செலுத்திய தகுதியான விவசாயிகளுக்கும் பணத்தைத் திரும்ப வழங்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பகுதி தள்ளுபடி பெற்ற விவசாயிகள் நவம்பர் 30-ம் தேதிக்குள் தவணைகளை செலுத்தினால், உரிய வட்டி நிவாரணமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் கடன் சுமையை குறைத்து, அடுத்த சாகுபடிக்கு தேவையான நிதி வசதியை ஏற்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
