சென்னை உட்பட 21 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை.. நவம்பர் 24-ல் கனமழை பெய்ய வாய்ப்பு!
தமிழகத்தில் மீண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய உள்ள நிலையில், சென்னை உட்பட 21 மாவட்டங்களுக்கு நவம்பர் 24-ம் தேதி கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
வங்கக்கடலில் உருவான அக்வான் புயல் ஒடிசா கடற்கரையை கடந்ததைத் தொடர்ந்து வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இதன் தாக்கம் குறைந்தாலும், கிழக்கிலிருந்து வீசும் காற்று மற்றும் பருவமழை காரணமாக தமிழகத்தில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 23-ம் தேதி கடலோர மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். குறிப்பாக கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 24-ம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், நவம்பர் 25-ம் தேதி தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களிலும், நவம்பர் 26-ம் தேதி கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நவம்பர் 23 முதல் 26 வரை இடியுடன் கூடிய மழை, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
