செய்திகள்

திருக்கார்த்திகை தீபத் திருவிழா: திருச்செந்தூர் கடற்கரையில் சொக்கப்பனை கொளுத்தி பக்தர்கள் வழிபாடு!

திருக்கார்த்திகை தீபத் திருவிழா: திருச்செந்தூர் கடற்கரையில் சொக்கப்பனை கொளுத்தி பக்தர்கள் வழிபாடு!

திருக்கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.

இதையொட்டி, நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், காலை 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றன. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதருக்கு 108 மகாதேவர் சன்னதி முன்பு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மூலவருக்கு உச்சிக்கால அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

மாலையில் கோவில் உள்பிரகாரத்தில் 108 விளக்கு பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மகா மண்டபத்தில் உள்ள விநாயகர், மூலவர் உள்ளிட்ட அனைத்து சுவாமி சன்னதிகளிலும் தீபம் ஏற்றப்பட்டது.

பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி மற்றும் தெய்வானையுடன் தங்கச் சப்பரத்தில் சண்முக விலாச மண்டபத்தில் எழுந்தருளினார். இதையடுத்து இரவு 6.55 மணியளவில் கோவில் கடற்கரையில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் வள்ளி, தெய்வானையுடன் தங்க ரதத்தில் எழுந்தருளிய சுவாமி கிரி வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கார்த்திகை தீபத் திருநாளையொட்டி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். கடற்கரையில் சொக்கப்பனை எரிந்த காட்சி பக்தர்களிடையே ஆன்மிக உற்சாகத்தை ஏற்படுத்தியது.