கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷுக்கு போலீஸ் சம்மன்!
கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பியதாக எழுந்த புகாரில், தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷுக்கு காவல்துறையினர் சம்மன் வழங்கியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது, மாவட்ட ஆட்சியர் ஜே.இ. பத்மஜா அளித்த புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தபோது, விசாரணையை மூத்த காவல்துறை அதிகாரி கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதன்படி, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். காவல்துறை ஐஜி என். காமினி விசாரணையை கண்காணிக்க உள்ளார்.
இந்நிலையில், இன்று கள்ளக்குறிச்சியில் உள்ள எம்எல்ஏ அருள் விக்னேஷின் வீட்டிற்குச் சென்ற காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் வழங்கப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.
