பதவி விலகிய இந்தோனேசிய துணை அதிபர்!
இந்தோனேசியாவின் துணை அதிபர் கிப்ரான் ரகாபூமிங் ரகா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவரது கல்வித் தகுதி தொடர்பாக எழுந்த சர்ச்சை மற்றும் நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தோனேசிய அதிபர் தேர்தலில், பிரபோவோ சுபியாந்தோவுடன் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கிப்ரான். முன்னாள் அதிபர் ஜோகோ விடோடோவின் மகனான இவர், தனது வெளிநாட்டுக் கல்விச் சான்றிதழ்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்திருந்தார்.

ஆனால், துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட குறைந்தபட்சம் உயர்நிலைப் பள்ளிக் கல்வியை முடித்திருக்க வேண்டும் என்பது அந்நாட்டு தேர்தல் விதிமுறை. இந்நிலையில், கிப்ரான் சமர்ப்பித்த கல்விச் சான்றிதழ்கள் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை நிறைவு செய்ததற்கான போதிய ஆதாரமாக இல்லை என இந்தோனேசிய நீதிமன்றங்கள் தெரிவித்தன. குறிப்பாக, அக்டோபர் 30ஆம் தேதி அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அவரது கல்விச் சமத்துவச் சான்றிதழை செல்லாது என அறிவித்தது.
இதையடுத்து, அவர் பதவி விலக வேண்டும் என அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். மேலும், நாடாளுமன்றத்தின் 8 கட்சிகளைச் சேர்ந்த சுமார் 120 உறுப்பினர்கள் அவருக்கு எதிராக பதவி நீக்க நடவடிக்கையை முன்னெடுக்க ஆதரவு தெரிவித்தனர்.

இந்தச் சூழலில், நவம்பர் 12ஆம் தேதி நாடாளுமன்ற மேலவையில் தனது ராஜினாமா கடிதத்தை கிப்ரான் சமர்ப்பித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது ராஜினாமா நடைமுறைகளை நாடாளுமன்றம் மேற்கொள்ள உள்ளது. இதனால் இந்தோனேசிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
