டிரம்பை கொ* செய்ய சதி.. பாகிஸ்தான் நாட்டவருக்கு அமெரிக்காவில் 27 ஆண்டுகள் சிறை!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களைக் கொ* செய்யத் திட்டமிட்ட வழக்கில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஆசிப் மெர்ச்சண்ட் என்பவருக்கு 27 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
48 வயதான ஆசிப் மெர்ச்சண்ட், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையான IRGC-யின் உத்தரவின் பேரில் இந்தக் கொலைத் திட்டத்தில் ஈடுபட்டதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டினர்.
கடந்த 2024ஆம் ஆண்டு அமெரிக்காவுக்குச் சென்ற அவர், டிரம்ப் உள்ளிட்ட அரசியல் தலைவர்களைக் கொ* செய்ய ஆட்களைத் தேடியதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. அப்போது அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடன் மற்றும் ஐநா முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி ஆகியோரும் இலக்குகளாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தத் திட்டத்திற்காக அவர் அணுகிய நபர்கள் உண்மையில் அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான FBI-யின் ரகசிய அதிகாரிகள் என்பது பின்னர் தெரியவந்தது. அவர்களுக்கு முன்பணமாக 5,000 அமெரிக்க டாலர்களையும் ஆசிப் மெர்ச்சண்ட் வழங்கியுள்ளார்.
இதையடுத்து, கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் டெக்சாஸ் மாகாணத்தில் அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த மார்ச் 2026-ல் அமெரிக்க நீதிமன்ற நடுவர் குழு அவரைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது.
இந்நிலையில், நியூயார்க்கின் புரூக்ளின் நகரில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்ற நீதிபதி எரிக் கோமிட்டி, நவம்பர் 17ஆம் தேதி அவருக்கு 330 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
2020ஆம் ஆண்டு அமெரிக்கத் தாக்குதலில் ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் நோக்கில் இந்தச் சதி திட்டமிடப்பட்டதாக அமெரிக்க தரப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும், தனது குடும்பத்தினரைப் பாதுகாக்கும் அழுத்தம் காரணமாகவே இந்தத் திட்டத்தில் ஈடுபட்டதாக ஆசிப் மெர்ச்சண்ட் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார்.
