வங்கக்கடலில் உருவாகும் 3-வது புயல்… நவம்பர் 18-ல் உருவாக வாய்ப்பு!
வங்கக்கடலில் இந்தப் பருவத்தின் மூன்றாவது புயல் உருவாக வாய்ப்புள்ளதாகத் தனியார் வானிலை ஆய்வு நிறுவனமான ஸ்கைமெட் தெரிவித்துள்ளது. நவம்பர் 18ஆம் தேதியையொட்டி மத்திய வங்கக்கடல் பகுதியில் இந்தப் புயல் உருவாகலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, நவம்பர் 13ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது நவம்பர் 14ஆம் தேதி வலுவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறி, நவம்பர் 15ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
தொடர்ந்து, சாதகமான வானிலை நிலவினால் இந்த அமைப்பு புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு புயலாக மாறினால், ஈரான் வழங்கியுள்ள ‘அக்வான்’ (Akvan) என்ற பெயர் சூட்டப்படும்.
இந்தப் புயலின் நகர்வு மற்றும் கரையைக் கடக்கும் இடம் குறித்து தற்போது உறுதியாகக் கணிக்க முடியவில்லை. இருப்பினும், முந்தைய இரண்டு புயல்களைப் போல தமிழகம் மற்றும் ஆந்திரக் கடலோரப் பகுதிகளைத் தாக்காமல் கடலில் வளைந்து செல்ல அதிக வாய்ப்புள்ளதாக ஸ்கைமெட் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசப் பகுதிகளுக்கு புயல் அச்சுறுத்தல் அதிகமாக இருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நவம்பர் 14 முதல் 17ஆம் தேதி வரை அந்தமான் கடல் மற்றும் வங்கக்கடலின் சில பகுதிகளில் மணிக்கு 40 முதல் 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
புயல் உருவாகுமா, அதன் பாதை என்ன என்பது குறித்து வரும் நாட்களில் கூடுதல் தெளிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
